மூன்று வயது ஆண் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது கழிவு நீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் விஜயகாந்த் என்ற எலக்ட்ரிஷியன் வசித்து வருகிறார். இவருக்கு ஜெபசெல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சாய்சரண் என்ற 3 வயது ஆண் குழந்தை இருகின்றான். இந்நிலையில் திருவண்ணாமலைக்கு விஜயகாந்த் வேலை விஷயமாக சென்றுவிட்டதால், ஜெபசெல்வி தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அடுத்து ஜெபசெல்வி வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சாய்சரண் திடீரென காணாமல் போனதை கண்டு ஜெப செல்வி அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் குழந்தையை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கதறி அழுதுள்ளார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குழந்தையை தேடும் போது, அவர்கள் வீட்டின் பக்கத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் சாய்சரண் விழுந்து கிடப்பதை கண்டனர். அதன்பின் குழந்தையை மீட்டு பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இறந்த தன் குழந்தையின் உடலை பார்த்து ஜெபசெல்வி கதறி அழுத சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.