மராட்டிய மாநிலத்தில் 30 அடி பள்ளத்தில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மராட்டிய மாநிலத்தில் உள்ள நந்தூர்பர் மாவட்டம் மால்காபூரில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து அதிகாலை 3 மணி அளவில் கொண்டாய் பரி மலைப் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை ஓட்டுநர் முந்துவதற்கு முயற்சி செய்துள்ளார். அப்போது லாரி ஒன்று எதிரே வந்ததால், விபத்து ஏற்படாமல் தவிர்க்க ஓட்டுநர் பேருந்தை திருப்பியுள்ளார். அப்போது பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே உள்ள 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் மிக ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் கண் விழிப்பதற்குள், பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது.
அதன் பிறகு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் 8 மணிநேரம் தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அந்த கொடூர சம்பவத்தில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் மூன்று ஆண் பயணிகள், டிரைவர் மற்றும் கண்டக்டர் என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி 35 படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.