தி மு க எம்.பி. ஞானதிரவியம் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள ஆவரைக்குளத்தை சேர்ந்த பாஸ்கரை ஹோட்டலில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ஞான திரவியம் ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராக்களை உடைத்து கையோடு எடுத்தும் சென்றுள்ளார் என்று பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் தாக்கியதாக கூறப்படும் பாஜக பிரமுகர் பாஸ்கரை முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதன் பின்னர் நெல்லை சந்திப்பில் உள்ள பாரதியார் சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் பணகுடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதும் எம்பியை கைது செய்ய வேண்டும் என்று பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதன் பின்னர் பொன் ராதாகிருஷ்ணனுடன் மாநகர காவல்துறை ஆணையர் சுரேஷ்குமார் நேரில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரும் அவர் போராட்டத்தை கைவிடாதன் காரணமாக பொன் ராதாகிருஷ்ணன் உள்பட பாஜகவினர் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “பாஜக நிர்வாகி மீது ஒரு எம்.பி. கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் என்னை அவர்கள் இங்கு போராடக் கூடாது என்று கூறுகிறார்கள். எம்.பி. மீது எப்ஐஆர் போடாவிட்டாலும் 307 சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். ஒரு மக்கள் பிரதிநிதி 30 ஆட்களை அழைத்து சென்று அடிக்கிறார். இதுவரை எத்தனையோ சாதி ரீதியான சம்பவங்கள் நெல்லையில் நடந்தேறியுள்ளது. இப்பொழுது நடந்த இச்சம்பவமானது இதற்கு மீண்டும் அடிக்கல் நாட்டியது போல் உள்ளது. இது ஒரு ஜனநாயக படுகொலை செயலாகும். மேலும் என்னை கைது செய்தாலும் நான் எனது போராட்டத்தை கைவிட மாட்டேன். தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பேன்” என்று கூறினார்