இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் 30 கோடி கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி Biological-E என்ற நிறுவனத்தின் தடுப்பூசிகளை தயாரிக்க ரூ.1,500 கோடியை முன்பணமாக வழங்குகிறது. இந்த நிறுவன தடுப்பூசியின் 3 வது கட்ட சோதனை நடந்து வரும் நிலையில், நல்ல முடிவை தருவதால் அரசு அனுமதி அளித்துள்ளது.