30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை பயணம் செய்யும் மின்சார காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது. வாகன எரிவாயுவின் பயன்பாடுகளை குறைக்கும் நோக்கத்தில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பல நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஓலா, ஹோண்டா போன்ற நிறுவனங்கள் மின்சாரத்தில் இயங்கும் இரு சக்கர வாகனங்களை அதிகம் உற்பத்தி செய்து வருகின்றது.
இதனைத் தொடர்ந்து மின்சாரத்தில் இயங்கும் கார்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் மின்சாரத்தில் இயங்கும் புதிய வகை காரை அறிமுகம் செய்துள்ளது. அவின்யா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் 2025 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் சிறந்த மென்பொருள் அமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எலக்ட்ரிக் காரை 30 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் வரை பயணிக்கலாம் என்றும் டாடா மோட்டார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.