Categories
கிரிக்கெட் விளையாட்டு

30 முதல் 50% ரசிகர்களை எதிர்பார்க்கிறோம்… ஐபிஎல்லை காண அனுமதி கிடைக்குமா?… UAE கிரிக்கெட் போர்டு..!!

ஐபிஎல் போட்டியில் 30 முதல் 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க அரசிடம் அனுமதி கேட்க இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் கிரிக்கெட் போர்ட் தகவல் அளித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கு பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் என கூறினார். அக்டோபர் 19 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 10ஆம் தேதி வரையில் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். முதலில் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்துவதற்கு முடிவு செய்தது.ஆனால் தற்போது ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்ட் 30 முதல் 50 சதவீத ரசிகர்களை மைதானத்திற்குள் அனுமதிக்கலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது.

இதுபற்றி ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட்டின் செயலாளர் முபாஷிர் உஸ்மானி கூறும்போது, “இந்திய அரசின் அனுமதி கிடைத்துவிட்டது என பிசிசிஐ தெரிவித்ததால், நாங்களும் பிசிசிஐ-யும் தயார்படுத்தும் பரிந்துரை மற்றும் நிலையான இயக்க நடைமுறைகள் பற்றி எங்கள் அரசிடம் கொண்டு செல்வோம். மிகவும் பிரபலமான இந்த தொடரை எங்களது மக்கள் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம்.

ஆனால் இது பற்றிய அனைத்து முடிவுகளும் அரசைச் சார்ந்து இருக்கின்றது. பெரும்பாலான போட்டிகள் இந்தப் பகுதியில் நடைபெறும் போது 30 முதல் 50 சதவீத அளவுக்கு ரசிகர்கள் பங்கேற்பார்கள். இப்போது அதே அளவில் ரசிகர்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதற்கு அரசு முழு அனுமதி தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என கூறியுள்ளார்.

Categories

Tech |