தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சூரியக்கோடு முள்ளங்குழி விளையில் ஜான் ஐசக்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சந்தியா(34) என்ற மனைவி இருந்துள்ளார். திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜான் வேலைக்கு சரிவர செல்லாமல் இருந்ததால் சந்தியா கடன் வாங்கி குடும்பத்தை நடத்தும் நிலை ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மணவாளக்குறிச்சி தட்டான்விளை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சந்தியாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி சந்தியா என்னிடமிருந்து 30 லட்சம் ரூபாயை வாங்கியுள்ளார் என அந்த வாலிபர் சந்தியாவின் தாய் காந்தியிடம் தெரிவித்துள்ளார். அதற்கு எனது மகளை பற்றி அவதூறாக பேசாதே என கூறி அந்த வாலிபரை கண்டித்துள்ளார்.
இதனை அடுத்து சந்தியாவின் தாய் தனது மகளின் செல்போன் எண்ணை நீண்ட நேரமாக தொடர்பு கொண்டுள்ளார். ஆனாலும் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதற்கிடையில் சந்தியா மீது போலீசில் புகார் கொடுக்கப் போவதாக அந்த வாலிபர் எச்சரித்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்து காந்தி தந்து உறவினர்களுடன் மகள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, சந்தியா தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஜான் அசைவற்ற நிலையில் படுக்கையில் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணவன், மனைவி இருவரின் உடலையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறும் போது 30 லட்சம் தர வேண்டும் என கூறிய வாலிபர் சந்தியாவை மிரட்டி இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். எனவே அவரிடம் விசாரணை நடத்த உள்ளோம். மேலும் இந்த தற்கொலை விவகாரத்தில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.