தஞ்சாவூர் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆற்றங்கரையை ஒட்டி 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் மூன்று மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தஞ்சாவூர்மாவட்டம் ஆத்தூர் பகுதியை அடுத்த கிராம பகுதிகளில் வெண்ணாறு கரையோரம் இருநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கிராமத்திற்குள் மழைக்காலங்களில் ஆற்று நீர் புகுந்து செல்லும் அபாயம் ஏற்படுகிறது. பல ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் ஆற்றங்கரையை ஒட்டி 30 லட்சம் ரூபாய் செலவில் தடுப்பு சுவர் கட்டப்பட்டது.
கடந்த சில தினங்களாக பெய்து வந்த கன மழையை கூட தாக்கு பிடிக்க முடியாது தடுப்புச்சுவர் நேற்றையதினம் இடிந்து விழுந்துள்ளது. தரமற்ற முறையில் கட்டப் பட்டதால் தான் சுவர் இடிந்து விழுந்ததாக கூறும் கிராம மக்கள் சுவரை கட்டிய ஒப்பந்ததாரர் மீதும், சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்க முயன்றபோது அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.