கொரோனா தொற்றை விரைவில் கண்டறியக்கூடிய கருவியை தயாரிக்க இஸ்ரேலுடன் இணைந்து இந்திய அதிகாரிகள் தயார் செய்ய இருக்கிறார்கள்.
கொரோனா நோய்க்கு எதிரான போரில் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக வேகமான பரிசோதனை முறை கருதப்படுகிறது. தொற்று பாதித்தவர்களை விரைவாக கண்டறிந்து, மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தினால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த இயலும். இருந்தாலும் தற்போதைய நிலையில் பரிசோதனை முடிவுகள் வருவதற்கு கால தாமதம் ஆகின்றது. அதனால் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றை வேகமாக கண்டறிய நவீன கருவிகளை தயாரிப்பதில் மத்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இத்தகைய பணிகளில் இஸ்ரேலிய நிபுணர் குழுவுடன் சேர்ந்து டி.ஆர்.டி.ஓ அதிகாரிகள் பணியாற்ற இருக்கின்றனர்.
அதற்காக இஸ்ரேலிய உயர்மட்ட நிபுணர் குழு சிறப்பு விமானம் மூலமாக நேற்று டெல்லி வந்தடைந்தது. அவர்கள் தங்கள் நாட்டில் இருக்கின்ற அதி நவீன கருவிகளையும் தங்களுடன் எடுத்து வந்துள்ளனர். இந்த நிபுணர்கள் அனைவரும் இந்தியாவின் தலைமை விஞ்ஞானி விஜயராகவன் மற்றும் டி.ஆர்.டி.ஓ அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வுப் பணிகளைத் தொடங்குவார்கள். இத்தகைய கருவியானது உருவாக்கப்பட்டால் 30 வினாடிகளில் கொரோனா தொற்றை எளிதாக கண்டறிய முடியும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் ஆட்டத்தின் போக்கையே முழுமையாக மாற்றக் கூடியதாக இருக்கும் என்று இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரான் மால்கா கூறியுள்ளார்.