டென்மார்க் நாட்டை சேர்ந்த கிறிஸ்த்துவ தூதரான பார்தோலோமஸ் ஸிகன்பால்க் என்பவர் 1706 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தரங்கம்பாடி பகுதிக்கு வந்தார். அவர் தமிழ்நாட்டிற்கு வந்ததும் அங்கு ஒரு அச்சகம் நிறுவினார். இதையடுத்து 1715 ஆம் ஆண்டு பைபிளில் உள்ள புதிய ஏற்பாடு என்ற பகுதியை தமிழில் மொழி பெயர்த்தார். இதுவே தமிழில் முதலில் அச்சடிக்கப்பட்ட புத்தகமாகும். இந்த பைபிளை தான் சார் வேர்ட்ஸ் என்று மற்றொரு கிறிஸ்துவ தூதர் தஞ்சாவூர் பகுதியை ஆட்சி செய்து வந்தபோது சர்போஜி மன்னரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் சுதந்திரம் அடைந்த பிறகு தமிழக அரசு இந்த பைபிளை தஞ்சாவூரின் சரஸ்வதி மாளிகை அருங்காட்சியத்தின் மக்களின் பார்வைக்கு வைத்தது. பல ஆண்டுகள் அங்கிருந்த பைபிள் கடந்த 2005 ஆம் ஆண்டு காணாமல் போனது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சமீபத்தில் லண்டன் அரசர் வைத்துள்ள பொருட்களின் படம் வெளியானது. அந்த புகைப்படத்தில் தமிழ்நாட்டில் காணாமல் போன பைபிள் போன்ற ஒரு புத்தகம் இடம்பெற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தமிழ்நாட்டு காவல்துறையின் சிலை கடத்தல் பிரிவின் சிஐடி பிரிவு கண்டுபிடித்துள்ளது.