செலவைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்து இருப்பதாக நெட்ஃபிக்ஸ் தெரிவித்துள்ளது. சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருவாயில் பெரும் சரிவைத் தொடர்ந்து நிறுவனத்தின் 2வது சுற்று பணிநீக்க நடவடிக்கை ஆகும். நெட்ஃபிக்ஸ் நிறுவனம் 300 ஊழியர்களை (அல்லது) 4% ஊழியர்களை பணி நீக்கம் செய்து இருப்பதாக அறிவித்துள்ளது. அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஏராளமானோர் அமெரிக்காவிலுள்ள நெட்ஃபிக்ஸ் ஊழியர்கள் ஆவர். கடந்த மாதம் நிறுவனம் 150 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சியால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நெட்ஃபிக்ஸ் தெரிவித்துள்ளது. சென்ற ஏப்ரலில் நெட்ஃபிக்ஸ் சில ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் தலையங்க ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. பணவீக்கம் உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் பிற ஸ்ட்ரீமிங் தளங்களிலிருந்து கடுமையான போட்டி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவால் சமீபத்திய மாதங்களில் நெட்ஃபிக்ஸ் அதிகமான அழுத்தத்தில் இருக்கிறது. முதல் காலாலாண்டில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு காணப்பட்டது. நடப்பு காலாண்டில் இன்னும் ஆழமான இழப்புகளை நிறுவனம் எதிர்பார்க்கிறது.
நிறுவனம் மலிவான மற்றும் உள்ளடக்கிய சந்தா திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் நெட்ஃபிக்ஸ் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது. ஜனவரி மாதத்தில் திட்டங்களின் விலை அதிகரித்ததில் இருந்து நெட்ஃபிக்ஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கூடுதலாக அமேசான், வால்ட் டிஸ்னி மற்றும் ஹுலு ஆகிய போட்டியாளர்களின் போட்டி தீவிரமடைந்தது. இந்த அனைத்து ஸ்ட்ரீமிங் தளங்களுக்கும் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்து வருகிறது.