முன்னூறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்து இந்தோனேசியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த முதியவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம் 65 வயது மதிப்புள்ள பிராங்கோயிஸ் கமிலி அபல்லோ என்ற நபரை போலீசார் கைது செய்து அவருடைய அறையில் இருந்த இரு சிறுமிகளை மீட்டுள்ளனர். அதன்பின் கைது செய்யப்பட்ட அந்த முதியவர் இந்தோனேசியாவில் 300 க்கும் மேல் உள்ள குழந்தைகளை வன்கொடுமை செய்துள்ளதாகவும், அவருடன் நெருக்கமுடன் இருக்க முடியாமல் மறுத்தவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அந்த முதியவர் லேப்டாப்பில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் வீடியோ பதிவை போலீசார் கண்டறிந்துள்ளனர். கடந்த ஐந்து வருடங்களாக தென்கிழக்கு ஆசிய நாட்டிற்கு சுற்றுலா விசாவில் இவர் பல முறை சென்றுள்ளார்.
ஜகார்த்தா போலீஸ் தலைவர் நானா சுட்ஜானா இவரை பற்றி கூறுகையில், இந்த முதியவர் குழந்தைகளை அணுகி அவர்களிடம் ஆசை வார்த்தைகளை பேசி அவர்களை கவர்வாரம். அவரின் பேச்சுக்கு இணங்கியவர்களுக்கு 250,000 முதல் ஒரு மில்லியன் வரை கொடுப்பாராம். அதாவது ரூ.1250 முதல் ரூ.1500 வரை சம்பளமாக கொடுத்து, அப்படி நெருக்கமாக இருக்க அனுமதிக்காதவர்களை அடித்து உதைத்து துன்புறுத்துவாரம். பல வருடங்களாக இந்தோனேசிய குழந்தைகளை துன்புறுத்தியுள்ளதால், இதில் மரணம் அடைந்தவர்கள் இருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர். இந்தோனேசியாவின் குழந்தைகள் நல பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் உள்ள குற்றச்சாட்டுக்கு இவர் ஆளாகி சிறையில் ஆயுள் தண்டனை அல்லது துப்பாக்கி மூலம் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று நம்பப்பட்டது.
இந்நிலையில் சிறையில் இருந்த பிராங்கோயிஸ் என்ற முதியவர் தற்கொலை செய்ய முடிவு செய்து கழுத்தில் கேபிள் ஒன்றை அழுத்தி பிடித்துக்கொண்டு , மூச்சுத் திணறி இறக்கும் வகையில் முயற்சிசெய்துள்ளார். இதையடுத்து, அதிகாரிகள் அவரை ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்கள் சிகிச்சைக்கு பின் நேற்று இரவு 8 மணிக்கு அவர் உயிரிழந்துள்ளார். இதை அதிகாரிகளும் உறுதிசெய்துள்ளதாக அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் அறிவித்துள்ளன.