18 உலக அதிசயங்களை வரைந்து சாதனை படைத்த மாணவனுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி மேட்டு வளவு பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக இருக்கின்றார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், தருண்ராஜா என்ற மகனும் இருக்கின்றனர். இதில் தருண்ராஜா தூக்கநாய்க்கன்பாளையத்தில் இயங்கிவரும் ஒரு தனியார் கல்லூரியில் பி.எட் பயின்று வருகிறார். இதனையடுத்து தருண்ராஜா பள்ளி காலத்தில் இருந்தே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால் தருண்ராஜா பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு தேசிய தலைவர்களின் படங்கள், இயற்கை ஓவியங்கள் வரைந்து அதற்கு பரிசுகளும் பெற்றுள்ளார்.
மேலும் மாவட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஓவிய பயிற்சி அளித்துள்ளார். இதுவரை 700-க்கும் மேற்பட்ட தேசிய தலைவர்கள், இயற்கை காட்சிகள், கோவில் சிலைகள், கடவுள் உருவங்கள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றை பென்சில் ஓவியம், புள்ளி ஓவியம், கோடு ஓவியம், நவீன ஓவியம், ஆயில் பெயிண்டிங், தஞ்சாவூர் ஓவியம், டிஜிட்டல் ஓவியங்களில் என பல விதங்களில் தருண்ராஜா வரைந்துள்ளார். அதன்பின் 2013-ஆம் ஆண்டு விஸ்வமலர் சார்பாக இளம் ஓவியர் விருது, 2015 ஆம் ஆண்டு பன்முக திறன் விருது, 2016-ம் ஆண்டு இளம் ஓவியர் விருது, ஓவிய மணி முரசு, கலைச்செம்மல் விருது உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விருதுகளைத் தருண்ராஜா பெற்றுள்ளார்.
இந்நிலையில் தருண்ராஜா 300 நொடிகளில் கொலோசியம், பிரமிட், மீசோ அமெரிக்கன் பிரமிட், பீசா டவர், ஈபில் டவர், புஜி கலீபா, தாஜ்மஹால், பிரகதீஸ்வரர் கோவில், எம்பயர் ஸ்டேட், லண்டன் பாலம், சீனப்பெருஞ்சுவர், பெட்ரா- ஜோர்டான், ஸ்டோன் ஹெஞ்ச், ஓபரா உள்ளிட்ட உலகின் 18 அதிசயங்களின் உருவப் படங்களை வரைந்தார். இதனை வீடியோவாக பதிவு செய்து கடந்த 5-ம் தேதி பாக்கர் எவர் ஸ்டார் என்ற உலக சாதனை புத்தகத்திற்கு தருண்ராஜா அனுப்பி வைத்துள்ளார். இவ்வாறு தருண்ராஜா வரையப்பட்ட ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு பாக்கர் எவர் ஸ்டார் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. இதனைத் தொடர்ந்து இதற்கான விருது மற்றும் சான்றிதழ்கள் தருண்ராஜா வீட்டிற்கு சம்பந்தப்பட்ட உலக சாதனை நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.