விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசியார்பட்டி பகுதியில்
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, நூர்சாகிபுரம்
சிவகுமார், துள்ளுக்குட்டி, பிரகதீஸ்வர், பொன்ரமணன் போன்றோர் கள ஆய்வு
மேற்கொண்டனர். இந்நிலையில் கல் திட்டை, முது மக்கள் தாழிகள் மற்றும் குத்துக்கல் போன்றவற்றை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது அரசியார்பட்டியில் செம்மண் நிலம் மேற்பரப்பில் புதைந்த நிலையில் சிறு அளவிலான 3 முது மக்கள் தாழிகள் இருக்கின்றன.
அதில் ஒரு தாழி வாய்ப்பகுதியின் விட்டம் 43 செ.மீ.இருக்கிறது. இதையடுத்து மேற்பகுதி அரைவட்டமாக உள்ள, 1 முதல் 3 அடி வரை உயரம் உள்ள சில பலகைக்கற்கள், தாழிகள் இருக்கும் பகுதியில் தனித்தனியாகக் காணப்படுகிறது. இவை அனைத்தும் சேதமடைந்த கல்திட்டையின் எஞ்சிய கற்கள் ஆகும். அதுமட்டுமல்லாமல் 3 மீட்டர் உயரமுள்ள ஒரு குத்துக்கல்லும் கீழே சாய்ந்த நிலையில் கிடக்கிறது. இவை சுமார் 3000 வருடங்கள் பழமையானவை என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
மேலும் பெரிய கற்களைக் கொண்டு இறந்தவர்களின் நினைவாக ஈமச்சின்னங்கள் அமைக்கப்பட்டதால் இந்த காலம் பெருங்கற்காலம் எனப்படுகிறது. இந்த காலத்தின் தொடக்கத்தில் இறந்தவர்களின் உடலை ஊருக்கு வெளியே உள்ள காடுகளில்
போட்டுவிடுவார்கள். அதை விலங்குகள் மற்றும் பறவைகள் இரையாய் கொண்டபின் இருக்கும்
எலும்புகளை சேகரித்து, அதோடு ஈமப்பொருட்களையும் தாழியில் வைத்து அடக்கம்
செய்வார்கள் என்ற தகவலையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்