இன்று குடியரசு தின நிகழ்ச்சிகள் முடிவடைந்த பிறகு வரலாறு காணாத அளவு 3 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் பேரணி விவசாயிகளால் நடத்தப்பட உள்ளது
இன்று தலைநகர் டெல்லி இரண்டு முக்கிய பேரணிகளை சந்திக்க இருக்கிறது. ஒன்று இந்தியாவின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வண்ணம் ராஜபாதையில் நடைபெற உள்ள முப்படைகளின் கம்பீர அணிவகுப்பு. இதை உலகமே உற்று நோக்குகிறது. மறுபக்கம் தங்களின் உரிமைக்காக லட்சக்கணக்கான விவசாயிகள் ஒன்று திரண்டு நடத்த உள்ள டிராக்டர்கள் பேரணி. ஒன்று வெற்றிக்கான பேரணி மற்றொன்று வெற்றிபெறுவதற்கான பேரணி. இந்த இரண்டு பேரணிகளையும் எப்படி சமாளிக்கப் போகிறது டெல்லி போலீஸ். இதுகுறித்து டெல்லியின் இணை ஆணையர் கூறுகையில், “முதலில் அனைவருக்கும் என் குடியரசு தின வாழ்த்துக்கள். தற்போது டெல்லி காவல்துறையினருக்கு மூன்று மிகப்பெரிய சவால்கள் இருக்கிறது.
ஒன்று கொரோனா இந்த முதல் சவால் காரணமாக வழக்கத்திற்கு மாறாக குடியரசு தினத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாதாரணமாக 1,15,000 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் இம்முறை 25,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று முக கவசம் சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்றவற்றை கவனிக்கும் பிரச்சினையும் காவல்துறைக்கு உள்ளது. இரண்டாவது குடியரசு தினத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள். டெல்லியில் எப்போதும் 4 அடுக்கு பாதுகாப்பு இருக்கும். ஒன்று சில நாட்களாகவே டெல்லியின் உள்ளே வரும் வாகனங்கள் மற்றும் புதிதாக வரும் மக்களை கண்காணித்து வருவோம். இரண்டாவது குறிப்பிட்ட மாவட்டத்திற்குள் செல்பவர்களை கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதிப்போம்.
மூன்றாவது ராஜபாதை சுற்றியிருக்கும் சாலைகளில் பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் பல வருடங்களாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இதுவரை குடியரசு தினத்தில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் டெல்லி போலீஸ் வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது. டிராக்டர் பேரணியை முன்னிட்டு சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெல்லி போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் அதோடு மத்திய உள்துறை அமைச்சகம் மேலும் 20000 மத்திய பாதுகாப்பு படையினரை கொடுத்துள்ளனர். எனவே ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முதலில் குடியரசு தினத்திற்கான பணிகள் நடைபெறும். நமது விவசாயிகளிடம் குடியரசு தின நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பிறகு டிராக்டர் பேரணியை வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.
அதற்கும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் விவசாயிகள் தரப்பில் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான டிராக்டர்களில் வந்து அணிவகுப்பில் பங்கேற்க போவதாக கூறப்பட்டுள்ளது. அப்படியானால் ஒரு டிராக்டரில் 5 பேர் வீதம் வைத்தாலும் குறைந்தபட்சம் 15 லட்சம் பேர் பேரணியில் பங்கேற்கக் கூடும். இதுகுறித்து காவல் ஆணையர் கூறுகையில் இந்த ட்ராக்டர் பேரணியானது வரலாறு காணாத ஒன்றாகத்தான் உள்ளது. இதில் எங்களுக்கு சாதகமான ஒன்று விவசாயிகள் ஏற்கனவே பொறுமையுடனும் கட்டுக்கோப்புடனும் 61 நாட்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இதுவரை சட்டம் ஒழுங்கிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் நடந்து கொள்ளவில்லை. அவர்களின் அந்த அணுகுமுறை எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. எனவே இன்று நடைபெற இருக்கும் பேரணியிலும் எந்த பிரச்சனையும் வராது என உறுதியாக நம்புகிறோம். எனவே இரண்டும் எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக நடக்கும் என்று கூறலாம். நமது இந்த குடியரசு தினம் உலக அளவில் கவனத்தை ஈர்க்கக் கூடிய ஒன்று. தீவிரவாதிகள் மற்றும் தேசவிரோதிகள் ஊடுருவும் முயற்சியை எடுக்கக்கூடும் ஆனால் நிச்சயமாக அவர்களின் ஊடுருவல் இருக்கும் என கூற முடியாது. எனவே மக்கள் இது பற்றி பயம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.