கொரோனா காரணமாக மிகவும் வறுமையில் உள்ள ஏழைகளுக்கு சுகாதார வசதிகளும், ஊட்டச்சத்து உணவும் கிடைக்காமல் போயிருக்கலாம் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டப்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த மாதம் 14-ந் தேதி நிலவரப்படி, நாட்டில் 33 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள்.
இவர்களில் பாதி பேர், அதாவது 17 லட்சத்து 76 ஆயிரம் பேர், கடுமையான ஊட்டச்சத்து பற்றாக்குறையால் சிரமப்படுகிறவர்களில் பெரும்பாலானோர் 1 முதல் 6 வயதுவரை உள்ள குழந்தைகள் ஆவார்கள். கடந்த வருடம் நவம்பர் மாத நிலவரப்படி பார்த்தால், 9 லட்சத்து 27 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையின் காரணமாக அவதிப்பட்டனர். அதனுடன் ஒப்பிடுகையில் இது ஓராண்டில் 91 சதவீத உயர்வு ஆகும்.
மாநில வாரியாக பார்த்தால், மராட்டிய மாநிலமானது 6 லட்சத்து 16 ஆயிரம் ஊட்டச்சத்து பற்றாக்குறை குழந்தைகளுடன் முதலிடத்தில் உள்ளது. பீகார், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகம் 1 லட்சத்து 78 ஆயிரம் குழந்தைகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.