தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அதனால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபற்றி விமர்சித்துள்ள ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு ஊசி இருப்பு இல்லை. மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் கொள்முதல் கொள்கைகள் தாம் இந்நிலைக்கு முழுமுதல் காரணம். “தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது ” என்று நாள்தோறும் மார்தட்டிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சில நாட்களாக காணவில்லை என்பதை கவனித்தீர்களா? என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.