தமிழகத்தில் கட்சியை தொடங்காத ரஜினியை பார்த்து நாங்கள் எதற்கு பயப்பட வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் களமிறங்கியுள்ளார்.
அவர் கடலூர் சில்வர் பீச்சில் உள்ள சுனாமி நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “தமிழகத்தில் மக்களுக்கு பொங்கல் பரிசாக 5 ஆயிரம் கொடுக்க திமுக வலியுறுத்தியது. ஆனால் 2500 மட்டுமே தற்போது வழங்குகிறார்கள். கடந்த முறை என்னை தீவிரவாதி போல போலீசார் அழைத்துச் சென்றார்கள். கட்சியே தொடங்காத ரஜினியை பார்த்து நாங்கள் எதற்கு பயப்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.