ஆப்கானிஸ்தானில் 35 லட்சம் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐ.நா சபை தெரிவித்திருக்கிறது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கைப்பற்றினர். எனவே ஆப்கானிஸ்தானிற்கு, அளிக்கப்பட்ட சர்வதேச நிதிகள் நிறுத்தப்பட்டது. மேலும், பிற நாடுகளில் இருக்கும் அந்நாட்டிற்குரிய சொத்துகளையும் முடக்கினர். எனவே, அந்நாட்டில் கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.
இது மட்டுமல்லாமல், கலவரம், தீவிரவாத தாக்குதல்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் அங்கு அகதிகளாக இருக்கும் 35 லட்சம் மக்கள் பசியால் வாடிக் கொண்டிருப்பதாக அகதிகளுக்கான உயர் ஆணையம் கூறியிருக்கிறது. இது தொடர்பில், செய்தி தொடர்பாளர் பாபர் பலோச் தெரிவித்துள்ளதாவது, ஆப்கானிஸ்தானில் மனிதாபிமானம் மோசமான நிலையில் இருக்கிறது.
அங்கு பட்டினிக் கொடுமை, இதற்கு முன்பு இல்லாத வகையில் அதிகரித்திருக்கிறது. அங்கு மொத்த மக்கள் தொகையில் சுமார் 55% மக்கள் வறுமையில் வாடுகின்றனர். மேலும், பாதுகாப்பிற்காக அந்த நாட்டில் இருக்கும் 35 லட்சம் அகதிகள் பட்டினியால் வாடிக் கொண்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.