ஸ்வீடன் இளவரசி சோபியா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கிவிட்டார்.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டிவிட்டது. இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த வைரசால் ஸ்வீடன் நாட்டில் 12,500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,300 க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் 35 வயதான ஸ்வீடன் நாட்டு இளவரசி சோபியா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கிவிட்டார். இவர் ஆன்லைனில் இதற்காக 3 நாள் பயிற்சியினை முடித்தபின் அந்நாட்டுத் தலைநகரில் இருக்கும் சோபியாஹெமெட் மருத்துவமனையில் தன்னார்வத் தொண்டு செய்ய தொடங்கியுள்ளார்.
மருத்துவமனையில் சுகாதார உதவியாளராக பணியில் சேர்ந்துள்ள இளவரசி சோபியா, கொரோனா நோயாளிகளை கையாள்வதில் நேரடியாக ஈடுபட மாட்டார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது, மருத்துவர் அல்லது சுகாதார பணியாளர்களுக்கு உதவும் பணியில் ஈடுபடுத்தப்படுவார் என்று நிர்வாகம் கூறியுள்ளது.
சோபியாஹெமெட் மருத்துவமனையின் ஆன்லைன் பாடத்திட்டம் மருத்துவமற்ற, ஆனால் சுகாதாரம் குறித்த சில முக்கியமான பயிற்சிகளை வழங்குகிறது. இது சுத்தம் செய்தல், சமையல் அறையில் வேலை செய்தல், உபகரணங்கள் கிருமி நீக்கம் செய்தல் என பலவற்றைக் கொண்டுள்ளது. இந்த பயிற்சியை முடித்தவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உதவலாம். தற்போது மருத்துவமனை வாரத்திற்கு 80 பேர் என்ற வீதத்தில் இந்த பயிற்சியினை தன்னார்வலர்களுக்கு வழங்கி வருகின்றது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் பணி அதிகரித்து வருவதாக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
“இந்த நெருக்கடியில், இளவரசி சோபியா சுகாதார பணிக்காக தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்புகின்றார். இதன் மூலமாக மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் பணி சுமையை குறைக்க முடியும். மருத்துவமனையில் பணி செய்ய தன்னார்வலர்கள் பலரும் தங்களை இணைத்துக்கொள்ள விரும்புகின்றனர்.” என அந்நாட்டு நீதிமன்றத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனது பணியின் முதல் நாளின் புகைப்படத்தினை இளவரசி சோபியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், நீல நிற உடைகளுடன் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நிற்கும் அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
முன்னதாக 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் அழகி பட்டம் வென்ற இந்திய வம்சாவளியான பாஷா முகர்ஜி (Bhasha Mukherjee) மீண்டும் தனது மருத்துவப்பணியினை இங்கிலாந்தில் தொடங்கியுள்ளார். இவர் இளங்கலை மருத்துவ பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/B_DNZsNpBta/?utm_source=ig_web_button_share_sheet