Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு…. மகாராஷ்டிராவில் மட்டும் 35,058 பேருக்கு தொற்று!

இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 4,970 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 134 பேர் நேற்று கொரோனவால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 56வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன.

உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 11ம் இடத்தில் உள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,01,139 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 35,058 பேரும், குஜராத்தில் 11,745 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் 11,760 பேரும், டெல்லியில் 10,054 பேரும், ராஜஸ்தானில் 5,507 பேரும், மத்திய பிரதேசத்தில் 5,236 பேரும், உத்தரபிரதேசத்தில் 4,605 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,163 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,249 பேரும், குஜராத்தில் 695 பேரும், மத்திய பிரதேசத்தில் 252 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதேபோல மேற்குவங்க மாநிலத்தில் 244 பேரும், ராஜஸ்தானில் 138 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 39,174 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 58,802 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |