மீஞ்சூர் அருகே பாஜக பிரமுகர் வீட்டில் 357 பவுன் நகை களவு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டம் செங்குன்றம் மீஞ்சூர் பகுதியை அடுத்த மேட்டுப்பாளையத்தில் வசித்து வருபவர் ஜானகிராமன். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஆவார். இந்நிலையில் ஜனவரி 20ஆம் தேதியன்று சென்னையில் உள்ள தனது தம்பி மகளுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், அந்த திருமணத்திற்கு வருகை தரும் விதமாக ஜானகிராமனின் மகனும் மகளும் அமெரிக்காவில் இருந்து சொந்த நாடு திரும்பினர்.
இதையடுத்து ஜானகிராமன் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு சென்னைக்கு புது துணி எடுப்பதற்காக வந்துள்ளார். பின் தனது தம்பி வீட்டிலேயே நேற்றுமுன்தினம் இரவு தங்கிவிட்டு காலை எழுந்து தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்த பொழுது வீட்டில் இருந்த ஐந்து பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 357 பவுன் நகை 50 ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருடு போய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கைரேகை நிபுணர்கள் உடன் அவரது வீட்டிற்கு விரைந்து சென்ற காவல் அதிகாரிகள், வீட்டில் அதிக நகை இருப்பதையும், ஆளில்லாததை அறிந்தும். சரியாக நோட்டமிட்டு கைவரிசை காட்டி இருப்பதால், கொள்ளையர்கள் இவருக்கு நெருக்கமானவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.