தேனி மாவட்டத்தில் 36 வயது பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இருக்கின்ற முத்துலாபுரம் என்ற பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 20 வயதுடைய மகேஸ்வரன் என்ற மகன் இருக்கிறான். அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருக்கின்ற தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் 36 வயதுடைய மலர்கொடி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இதனை அறிந்த மலர்கொடியின் கணவர் அவரை கண்டித்துள்ளார். இருந்தாலும் மலர்க்கொடி கள்ளக்காதலை விடவில்லை. இதனைத் தொடர்ந்து இனிமேல் ஊரில் இருந்தால் நம்மால் சேர்ந்து வாழ முடியாது என்று எண்ணிய மாணவர் மகேஸ்வரன் மற்றும் மலர்க்கொடி ஆகிய இருவரும் கடந்த 5 நாட்களுக்கு பெங்களூருவுக்கு தப்பிச் சென்றனர்.
அங்கு தனக்கு தெரிந்த நண்பரின் வீட்டில் மலர்க்கொடி மற்றும் மகேஸ்வரன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் 2 பேரும் பெங்களூருவுக்கு சென்றதால், அவர்களின் குடும்பத்தினருக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதனால் அவர்களைத் தொடர்பு கொண்டு ஊருக்கு திரும்பி வருமாறு உறவினர்கள் அழைப்பு விடுத்தனர். அதன் பிறகு இரண்டு பேரும் நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பினர். ஆனால் அவர்கள் ஊருக்கு வராமல், ஊருக்கு அருகே உள்ள வெள்ளை கரடி என்ற பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு சென்ற 2 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இரண்டு பேரையும் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மகேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். மலர்க்கொடி மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.