முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.367.05 கோடி நன்கொடை கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கிடைத்த தொகையின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும் நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு சார் வாரியங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து இதுவரை ரூ.367.05 கோடி நிதி வந்துள்ளது.
சக்தி மசாலா பிரைவேட் லிமிடெட் ரூ.5 கோடி, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ரூ.2 கோடி, மொபிஷ் இந்தியா பௌண்டேஷன் ரூ.1.50 கோடி என மொத்தம் 367.05 கோடி நிதி கிடைத்துள்ளது. நிதியளித்த நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் முதல்வர் பழனிச்சாமி நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ஆதரவாக, தங்களது ஒரு நாள் ஊதியத்தை மனமுவந்து அளித்த அரசு ஊழியர்களுக்கும், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.