உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசின் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 3,827 ஆக உள்ள நிலையில் சீனாவில் நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் உலகளவில் மொத்தமாக பலியானோரின் எண்ணிக்கை 3, 827 ஆக உயர்ந்துள்ளது. 97 நாடுகளில் 1,09,976 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தநிலையில் சீனாவில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான இறப்பு ஏற்பட்டு வந்த நிலையில் நோயின் தாக்கம் தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, அந்நாட்டில் ஒரே நாளில் 28 பேர் இறந்துள்ளனர். ஆனால் சீனாவுக்கு அடுத்த படியாக கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி இருக்கிறது. ஆம், அந்நாட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 366 ஆக இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் 133 பேர் இறந்தது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
சீனா தற்போது படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரும் அதேவேளையில், இத்தாலியில் கொரோனா வேகம் காட்ட தொடங்கியுள்ளதால், என்ன செய்வதென்று தெரியாமல் அந்நாடு திகைத்து போய் இருக்கிறது. அதேபோல ஈரான் நாட்டிலும் 194 பேர் பலியாகி இருக்கும் நிலையில் ஒரே நாளில் 49 பேர் கொரோனாவின் கோரத்திற்கு உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவிலும் கொரோனா வேகமாக பரவி வருகின்றது.