தேர்தல் நெருங்கும் நேரத்தில் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட் விவகாரம் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 ஆண்டுகால கூவத்தூர் ரகசியத்தை ஒரே நிமிடத்தில் போட்டுடைத்துள்ளார் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ். முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைவு, அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்பு, தற்காலிக முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம், புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பு என 2017ஆம் ஆண்டு எத்தனை விறுவிறுப்புகளை இருந்தாலும் கூவத்தூர் ரிசார்ட்டை மறந்திருக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முக்கிய பங்கு வகித்தது கூவத்தூர் ரிசார்ட்.
சசிகலா தலைமையில் கிட்டத்தட்ட 10 நாட்களாக அதிமுக எம்எல்ஏக்கள் அங்கு முகாமிட்ட நிலையில் அப்படி என்னதான் நடக்கிறது ? என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. இச்சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகள் ஆனபோதிலும் கூவத்தூர் ரகசிய மீதான எதிர்பார்ப்பு குறையவில்லை. தற்போது அந்த ரகசியத்தை பளிச்சென உடைத்துள்ளனர் அந்த சமயத்தில் அங்கு இருந்த எம்எல்ஏ கருணாஸ். கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திருவாடானை தொகுதியில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த கருணாஸ் அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். திமுக கூட்டணியோடும் கருணாஸ் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் பல தரப்பில் இருந்து அழைப்பு வருவதாகவும் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்றும் கருணாஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து கூவத்தூர் ரகசியத்தை கூறியுள்ளார். அப்போது பேசிய கருணாஸ், எடப்பாடி பழனிச்சாமி டெல்லியிலே சொல்கிறார்… நான் ஒன்றும் சின்னம்மா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட வில்லை… சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் என்று சொல்லுகிறார்கள். கூவத்தூரில் என்ன நடந்தது ? என இந்த உலகமே பார்த்தது. அன்றைக்கு அவர் எப்படி அந்த பதவியை வாங்கினார் ? சின்னம்மா அவரை எப்படி ஆசிர்வாதம் செய்து கொடுத்தார் ?
எந்த அளவிற்கு அவர் மீது நம்பிக்கை வைத்து செய்தார். இதையும் கடந்து இன்றைக்கு பல அமைச்சர்கள் எல்லாம் வாய் கிழிய பேசுகிறார்கள். சாப்பிடுகிற சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிடுறோமா… அப்படி என்று கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும். இதே கூவத்தூரில் எடப்பாடி அவர்கள் பதவியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது அங்கே புரட்சித்தலைவி அம்மாவினுடைய படத்தை வைத்து…. ஒரு அகல்விளக்கை வைத்து…. பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருமே நின்று சத்தியம் செய்து சின்னம்மா அவர்கள் காலிலே வணங்கி ஆசிர்வாதம் பெற்றதை யாராவது மறுக்கமுடியுமா ?
அன்றைக்கு நானும், தனியரசு அண்ணனும் அங்கே இருந்தோம். நாங்கள் இருவர் மட்டும் தான் அந்த விளக்கில் சத்தியம் செய்ய வில்லை. ஏன் என்று சொன்னால் ? நாங்கள் அதிமுகவை சார்ந்தவர்கள் இல்லை, நாங்கள் ஒரு தனி அமைப்பை சார்ந்தவர்கள். என்ன சத்தியம் செய்தீர்கள் ? அது உங்களுக்கும் சின்னம்மா அவர்களுக்கும் தான் வெளிச்சம். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்…. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்று சொன்னால் கூவத்தூரிலே… மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எனக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை. என் சமுதாயம் சார்ந்து எனக்கு செய்து தருகிறேன் என்று சொன்ன காரியங்களையும் சாத்தியப்படுத்த வில்லை என கருணாஸ் கூறினார்.