விராலிமலை அருகே பெற்ற குழந்தையை வறுமைக்காக தாயே ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே இருக்கின்ற வேலூர் பூங்கா நகர் இன் ஹாஜி முகமது மற்றும் அமினா பேகம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி அவர்களுக்கு நான்காவதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே ஹாஜி முகமது சமையல் வேலை செய்து வருவதால் குடும்பத்தை நடத்த மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
அதனால் அவர்களின் வீட்டுக்கு அருகே வசித்துக் கொண்டிருக்கும் கண்ணன் என்பவர், நீங்கள் வறுமை நிலையில் உள்ளதால் குழந்தையை உங்களால் வளர்க்க முடியாது, அதனால் கடைசியாக பிறந்த குழந்தையை குழந்தையில்லாத நபருக்கு பெற்றுத்தருவதாக தம்பதியிடம் கூறியிருக்கிறார். குடும்பத்தின் வறுமை காரணமாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதன்பிறகு கடந்த ஒருவாரத்திற்கு முன்னர் அமினா பேகத்தை ஈரோட்டிற்கு கண்ணன் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு குழந்தையை ஒரு நபரிடம் விட்டுவிட்டு ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அமினா பேகத்திடம் கொடுத்துள்ளார். அச்சமயத்தில் குழந்தையின் தாய் மற்றும் தந்தையின் ஆதார் எண்கள் ஒரு வெற்றுப் பத்திரத்தில் எழுதப்பட்டு அவர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழந்தையின் தாயை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.