குஜிலியம்பாறை அருகில் கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகில் டி.கூடலூரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலங்களை சட்ட விரோதமாக சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் இணை ஆணையர் பாரதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதன்பின் அதிகாரிகள் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறக்கொடைகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போவதாக நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பினார்கள். இந்நிலையில் திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமையில், கோவில் செயல் அலுவலர் மாலதி, அதிகாரிகள் நேற்று முன்தினம் டி.குடலூருக்கு சென்று ஆக்கிரமிப்பு செய்த நிலங்களை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தானாகவே முன்வந்து நிலங்களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த இடத்தின் மதிப்பு சுமார் 4 கோடி இருக்கும் என்றனர். இதையடுத்து மீட்கப்பட்ட நிலங்கள் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்று அதிகாரிகள் அறிவிப்பு பலகை நட்டு வைத்தனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ரஞ்சனி, பணியாளர்கள் உடன் இருந்தார்கள்.