தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 4 நாட்களுக்கு இரவு நேர ரயில் சேவை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சென்னை கோட்டத்தின் திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை பிரிவில் வருகின்ற நவம்பர் 20, 24,27, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் இரவு 8 மணி முதல் 11.45 மணி வரை 4 நாட்களுக்கு பாதை புதுப்பித்தல் பணிகளுக்காக திட்டமிடப்பட்ட போக்குவரத்து தடைகள் காரணமாக ரயில் சேவைகள் மாற்றி அமைக்கப்படுகிறது.
அதன்படி ரயில் எண் 17229 திருவனந்தபுரம் சென்ட்ரல் மற்றும் செகந்திராபாத் ஜே.என் டெய்லி சபரி எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும். நவம்பர் 20, 24, 27, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் அதாவது 3 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப் போலவே ரயில் எண் 16526 கேஎஸ்ஆர் பெங்களூரு- கன்னியாகுமரி டெய்லி ஐலண்ட் எக்ஸ்பிரஸ் கேஎஸ்ஆர் பெங்களூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்படும் ரயில், மேல் குறிப்பிட்ட 4 தேதிகளில் இரவு 9.10 மணிக்கு கேஎஸ்ஆர் பெங்களூரில் இருந்து புறப்படும் அதாவது ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.