திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நாலு மாதம் தான் அதிமுகவின் ஆட்சி இருக்கும் என்று கூறியுள்ளார்
வேலூர் மாவட்டத்தில் இருக்கும் காட்பாடி அடுத்துள்ள வன்றந்தங்கள் கிராமத்தில் திமுக பொதுச் செயலாளர் மற்றும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினரான துரைமுருகன் மக்களிடம் மனுக்களைப் பெற்றார். அப்போது நடைபெற்ற கூட்டத்தில் துரைமுருகன் பேசியபோது அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக கிராம சபை கூட்டத்தை காந்தி ஜெயந்தி அன்று இந்த அரசுதான் ரத்து செய்துள்ளது.
திமுகவின் தலைவர் இன்று நடைபெற இருக்கும் கிராம சபை கூட்டத்தில் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்று விவசாய சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக படிக்க வேண்டும் என்று நேற்றே கூறினார். அவரது அறிக்கை வெளிவந்த உடனேயே கிராம சபை கூட்டத்தை அதிமுகவினர் ரத்து செய்தனர். நாங்கள் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று கூறுவது விவசாயிகள் நலனுக்காக தானே தவிர அரசியலுக்காக இல்லை.
நேற்று மாலை வரை கொரோனா அச்சம் தெரியாமல் இருந்த அரசுக்கு இரவு ஒன்பது மணிக்கு மேல் கொரோணா பற்றிய அச்சம் தெரியவந்துள்ளதா? அந்த சமயத்தில் தான் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்தனர். EPS மற்றும் OPS இடையே இருக்கும் கருத்து வேறுபாட்டினால் அரசு அதிகாரிகளே குழம்பிப் போய் நிற்கின்றனர். தொடர்ந்து எங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய பட்டாலும் அதனை நேரடியாக நீதிமன்றத்தில் சந்தித்துக் கொள்வோம். இன்னும் 4 மாத காலம் தான் இந்த ஆட்சி இருக்கும். ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே மண், ஒரே கொள்கை என்பது நாட்டிற்கு மிக மிக ஆபத்தானது” என கூறினார்.