தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் குமரி, தேனி, புதுக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டங்களில் கன மழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்னும் நான்கு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.