4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காவலாளிக்கு 20 வருட சிறை தண்டனை விதித்து கோவை போச்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை மாவட்டம், வெள்ளலூர் பகுதியில் வசித்து வருபவர் 57 வயதுடைய ரவிச்சந்திரன். இவர் சிங்காநல்லூர் பகுதியில் இருக்கின்ற ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2020-ஆம் வருடம் நவம்பர் மாதம் அதே பகுதியில் வசித்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை பார்த்த குடியிருப்புவாசிகள் அவரை பிடித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். போலீஸ் விசாரணைக்கு பிறகு இந்த வழக்கு புலியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவிச்சந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர். இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருக்கின்ற போக்சோ கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளி ரவிச்சந்திரனுக்கு 20 வருடங்கள் சிறை தண்டனையும், ரூ 10,000 அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ ஒரு லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.