Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

4 வயது சிறுமியின் கோரிக்கை… “பிஞ்சு மனம் ஏமாறக்கூடாது” 4 நாளில் நிறைவேற்றிய தலைவர்.. குவியும் பாராட்டுக்கள்..!!

குழந்தையின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் செய்த பணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு பாத்தியப்பட்ட கோட்டக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத். எப்பொழுதும்போல் சம்பத் தனது அலுவலகத்தில் பணியில் இருந்த போது அங்கு சென்றிருக்கிறார் 4 வயது சிறுமியான ஹரிணி, அந்த சிறுமி சம்பத்திடம் வந்து தன் மழலைக் குரலில் தன் வீட்டில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக கூறியுள்ளார். சிறுமி  புன்னகையுடன் வைத்த கோரிக்கையை மறுப்பதற்கு சம்பத்திற்க்கு மனமில்லை. இது குறித்து அவர் கூறுகையில்,“ நான்கு நாள்களுக்கு முன்னதாக ஹரிணி என்னிடம் தன்னுடைய வீட்டில் தண்ணீர் வரவில்லை, எங்களுக்கும் தண்ணீர் வேண்டும் எனக் கேட்டார்.

ஒரு குழந்தையின் விண்ணப்பத்தை என்னால் நிராகரிக்க முடியவில்லை. ஒருவேளை குடிநீர் இணைப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படாவிட்டால் சிறுமிக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும். இவ்வளவு சின்ன வயதில் பெரிய ஏமாற்றமாகத் தெரியும் அதனால்தான் குடிநீர் இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன். அந்த சிறுமியை நோகடிக்க எனக்கு மனமில்லை. என்னைச் சந்திக்க வரும்போது ஹரிணி முகக்கவசம் அணியவில்லை. அதனால் அவளைச் சந்திக்கச் செல்லும்போது முகக்கவசங்களும் வாங்கிக் கொடுத்துவிட்டுவந்தேன்” என்கிறார், ஊராட்சி மன்றத் தலைவர் சம்பத்.

குழந்தையின் பிஞ்சு மனம் ஏமாந்து போகக் கூடாது என்று கருதிய சம்பத், அதற்கான நடவடிக்கைகளை எடுத்து அக்குழந்தையின் வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வழங்கி,குழந்தையின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று குழந்தையின் குடும்பத்தார் அனைவருக்கும் முகக்கவசங்களை வழங்கியுள்ளார். அவரது இந்த செயல் அப்பகுதி மக்கள் பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக சிறுமி ஹரிணியின் தந்தை சஞ்சய் கூறிய போது, ”எங்களுடைய துன்பத்தை காண சகிக்காத எங்களுடைய  மகள் ஊராட்சி மன்ற தலைவரிடம் நேரடியாகச் சென்று கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து எங்களுக்கு தெரியாது.

ஊராட்சி மன்றத் தலைவர் எங்கள் வீட்டிற்கு வந்து இதைக் கூறிவிட்டு குழாய் இணைப்பு ஏற்படுத்தித் தருவதாகச் சொன்னார். சொன்னபடி,குடிநீர் இணைப்பு கிடைக்கப்பெற்றது. தண்ணீரை விலை கொடுத்து வாங்கிய எங்களுக்கு இது மிகப் பெரிய உதவி. அவருக்கு கோடானகோடி நன்றி” என தெரிவித்துள்ளார். நான்கு வயது சிறுமியின்  கோரிக்கைகளை மதித்து நான்கே நாட்களில் குடிநீர் இணைப்பை கொடுத்த ஊராட்சி மன்றத் தலைவர் உண்மையில் மிகவும் பாராட்டுக்குரியவர்.

Categories

Tech |