47 வயதான முதியவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியில் வசித்து வரும் உமர் முக்தர் என்பவருக்கு 47 வயது ஆகிறது. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி தனது வீட்டின் அருகில் வசித்து வந்த 4 வயது சிறுமிக்கு பலூன் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சின்ன தாராபுரம் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கடந்த 7 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று கரூர் மகிளா நீதிமன்ற நீதிபதி நசீமா பானு தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில் சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் இரண்டு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. குற்றவாளியான இந்த நபரின் பெயர் வீரசின்னு. இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிறகு தமது பெயரை உமர் முக்தர் என மாற்றிக் கொண்டுள்ளார். இவர் மூன்று திருமணங்கள் செய்து கொண்டு அவர் அனைவரையும் பிரிந்து சின்ன தாராபுரம் பகுதியில் குடியேறி கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் பணியை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.