வலிப்பு நோயால் கீழே விழுந்த தனது தாயை ஆம்புலன்சை அழைத்து சிறுவன் காப்பாற்றிய சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள மாண்டி காக்கர் என்ற 4 வயதுடைய சிறுவன் வலிப்பு நோயால் கீழே விழுந்து பாதிப்புக்குள்ளான தனது தாயை ஆம்புலன்சை அழைத்து காப்பாற்றியுள்ளான். இந்த சம்பவம் அங்கு அவனுக்கு பாராட்டை பெற்றுத்தந்துள்ளது. இந்த சம்பவத்தன்று மாண்டி காக்கரின் தாய் வலிப்பு நோயால் கீழே விழுந்து விட்டார். இதை கண்ட சிறுவன் உடனடியாக தேசிய நெருக்கடி கால எண்ணுக்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்சை வரவழைத்தான். அதன்பேரில் ஆம்புலன்ஸ் விரைந்து வந்துள்ளது.
அந்த ஆம்புலன்சிலிருந்த டாக்டர், மருத்துவ பணியாளர்கள் அந்த பெண்ணுக்கு தகுந்த சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர். டாஸ்மேனியாவின் டான்சஸ்டன் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு முந்தைய நாள்தான் அந்த பெண், தன் மகனுக்கு நெருக்கடியான காலத்தில் தேசிய நெருக்கடி கால எண்ணை தொடர்பு கொள்வது பற்றி கற்றுத்தந்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அந்த சிறுவனின் புத்திசாலித்தனத்தை பாராட்டி தேசிய நெருக்கடி கால சேவை அமைப்பினர் நேற்று பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.