பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் சுலைமான் ஷெஹ்பாஸ். கடந்த 2018- ஆம் ஆண்டு இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது சுலைமான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடர்ந்து அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தனர். அப்போது சுலைமான் நாட்டை விட்டு தப்பி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சமடைந்தார். இதனையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான் கான் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்ற பிறகு அவரது குடும்பத்தினர் மீதான குழல் வழக்குகளின் விசாரணை மந்தமாகியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுலைமானை கைது செய்வதற்கு இஸ்லாமாபாத் ஹைகோர்ட் தடை விதித்ததோடு, ஜாமீன் பெறுவதற்கு 13-ஆம் தேதிக்குள் அவர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் 4 ஆண்டுகளுக்கு பிறகு சுலைமான் நேற்று முன்தினம் நாடு திரும்பியுள்ளார். அப்போது விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சுலைமான், தன் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. எனவே பாதுகாப்பிற்காக தான் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.