தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட் எடுத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை இர்பான் பதான் பாராட்டியுள்ளார்..
இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாபிரிக்கா அணி 3 டி20 தொடர் மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2:1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியும், இந்தியா ஒரு வெற்றியும் பெற்ற நிலையில், இரு அணிகளுமே 1:1 என சமநிலை வகித்தது..
இந்த நிலையில் நேற்று டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் கடைசி ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 27.1 ஓவரில் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.. இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4.1 ஓவர் வீசி 18 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
மேலும் வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஷபாஷ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 19.1 ஓவரில் 3 விக்கெட் இழந்து 105 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி கோப்பையை வென்றது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 4/18 என எடுத்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், “குல்தீப் யாதவின் ஃபார்ம் 2022 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கிறது. இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லது” என்று தெரிவித்துள்ளார். அதேபோல தரமான பந்துவீசி தொடர் நாயகன் விருதை வென்ற சிராஜையும் பாராட்டினார்.
27 வயதான குல்தீப் யாதவ் ‘இந்த போட்டியின் ஆட்டநாயகனாக’ தேர்வு செய்யப்பட்டார். 2019 ஜனவரிக்குப் பிறகு குல்தீப் ஒருநாள் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்துவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது..
Kuldeep yavad’s form and year 2022 just keep getting better. Good for Indian cricket. #INDvsSA
— Irfan Pathan (@IrfanPathan) October 11, 2022
Well done Siraj on winning man of the series. Quality bowling 👏
— Irfan Pathan (@IrfanPathan) October 11, 2022