திருநெல்வேலியில் முன்னாள் ஊராட்சிமன்ற செயலாளர் கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருநெல்வேலி டவுனை அடுத்துள்ள பேட்டை மயிலாபுரம் பகுதியில் கருத்தப்பாண்டி (எ) கணேச பாண்டியன்(54) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருப்பணிகரிசல்குளம் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற செயலாளரான கருத்தப்பாண்டி அப்பகுதியில் செங்கல் சூளை மற்றும் டாஸ்மார்க் நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து கடந்த மாதம் 12-ஆம் தேதி டாஸ்மார்க் அருகில் இருந்த கருத்தப்பாண்டியை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே கருத்தப்பாண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து சுத்தமல்லி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்துள்ளனர். அப்போது பேட்டை சேர்ந்த பாஸ்கர்(28) என்பவருக்கும் கருத்தபாண்டிக்கும் முன்பகை இருப்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து பாஸ்கரை பிடித்து விசாரித்ததில் அவரது நண்பர்களான அப்துல் காதர்(30), மைதீன்ஷேக்(25), விஜி(26) ஆகியோருடன் இணைந்து கருத்தபாண்டியை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அந்த 4 பேர் ஏற்கனவே பல்வேறு குற்றங்களில் தொடர்பு இருந்ததால் திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிகாரிகள் மணிவண்ணன் பரிந்துரையின் படி மாவட்ட ஆட்சியர் கண்ணன் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்களை கைது செய்த போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.