பாகிஸ்தானில் இந்து கோவில் சிலையை சேதப்படுத்திய 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சாக்ரோ என்ற நகரிலுள்ள மாதா தேவல் பித்தானி என்ற இந்து கோவில் உள்ளது. இந்த கோவிலை இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள் 4 பேர் அங்குள்ள சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து சம்பவம் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிலையை சேதப்படுத்திய 4 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் போலீசார் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது கோவில் உண்டியலில் உள்ள பணத்தை திருடுவதற்காக நாங்கள் கோவிலை சேதப்படுத்தினோம் என்று தெரிவித்தனர்.
இதனிடையே கோவிலை சேதப்படுத்தியவர்கள் ‘தெய்வ நிந்தனை’ செய்ததாகக்கூறிய சிந்து மாகாண சிறுபான்மை துறை மந்திரி அரிராம் லால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுக்கொண்டார்.
மேலும் சிந்து மாகாணத்தில் உள்ள “சாக்ரோ அமைதிக்கு பெயர் பெற்ற நகரம். இங்கு சமூக நல்லிணக்கத்தை சீர்குலைத்து மத கலவரத்தை தூண்டும் முயற்சியில் சில சமூக விரோதிகள் ஈடுபட்டுள்ளனர். இந்து மக்களை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என்றும் அவர் சொன்னார்.