காய்ச்சலுக்காக நாட்டுவைத்தியம் செய்துவிட்டு திரும்பிய சிறுவன் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அண்ணா நகரில் வசிப்பவர் சத்தியமூர்த்தி. இவர் தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஹரிஷ்(11) என்ற ஒரு மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஹரீஸுக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் சத்தியமூர்த்தி மற்றும் அவரின் மனைவி இருவரும் ஹரிஷை அழைத்துக்கொண்டு பட்டம்புதூரிலுள்ள நாட்டு வைத்தியரைப் பார்க்க சென்றுள்ளனர்.
இந்நிலையில் நாட்டு வைத்தியம் முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது தேசிய நெடுஞ்சாலையில் ஹரிஷுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சுங்கச்சாவடியிலுள்ள ஆம்புலன்சில் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஹரிஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.