Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

4 மாவட்டம் …. 12 நாட்கள்…. எது இயங்கும் ? எது இயங்காது ? முழு விவரம் …!!

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் 4 மாவட்டங்களுக்கு மீண்டும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை தமிழக முதலமைச்சர் மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அதில் மருத்துவ வல்லுநர் குழு கொரோனா அதிகமுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்ற பரிந்துரையை வழங்கி இருந்தது. அதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவையில் தமிழக மருத்துவ குழுவினருடன் நடந்த ஆலோசனை மற்றும் மருத்துவக்குழு பரிந்துரை குறித்த விவரங்கள் வாதிக்கப்பட்டு, தமிழக அரசு சார்பில் பல்வேறு முடிவுகள் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிவிப்பில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 16-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி இரவு 12 மணிவரை 12 நாட்களுக்கு மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எந்த பகுதியில் ஊரடங்கு :

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தமல்லி ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊரடங்கு தொடரும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும்,  நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சிகளிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பொது முடக்கம் தொடரும். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்.

என்னென்ன தளர்வு ?

மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் சேவை சார்ந்த பணிகளுக்கு அனுமதி.

அவசர மருத்துவ தேவைகளுக்கு வாடகை ஆட்டோ டாக்சி மற்றும் தனியார் வாகனம் உபயோகிக்க அனுமதி.

மத்திய, மாநில அரசுத் துறைகள் 33 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் .

வங்கிகள் 33 சதவீத ஊழியர்களுடன் 29.6.20 மற்றும் 30.6.20 ஆகிய நாட்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வங்கி பணி மற்றும் போக்குவரத்து சேவை வழக்கம் போல் செயல்படும்.

பொதுவினியோக கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.

காய்கறி கடைகள், மளிகை கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உரிய விதிகளுக்குட்பட்டு சமூக இடைவெளியுடன் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.

காய்கறி பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

அத்தியாவசிய பொருட்களை வாங்கும் பொதுமக்கள் வாகனங்களை பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்தின் அருகிலேயே அதாவது இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்குள் மட்டும் நடந்து சென்று பொருட்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் தங்கியிருக்கும் முதியோர் நோயாளிகளுக்கு உதவி புரிவோருக்கு அனுமதி வழங்கப்படும்.

அம்மா உணவகங்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு அரசு உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.

பொது மக்களுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.

அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் செயல்படும்.

நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள் செயல்படும்.

மேற்கண்ட 12 நாட்கள் பணியிட வளாகத்திலேயே தங்கியிருந்து பணிபுரிய தொழிலாளர்களைக் கொண்டு கட்டுமானப்பணி அனுமதிக்கப்படும்.

சரக்கு போக்குவரத்துக்கும் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனத்துக்கும் எவ்வித தடையும் கிடையாது.

வெளிமாநிலங்களில் இருந்து வருகின்ற விமானங்களும், அதேபோல் வெளிநாட்டில் இருந்து வருகின்ற விமானங்களுக்கும் கப்பலுக்கும் தற்போதைய உள்ள நடைமுறையே தொடரும்.

104 கட்டுப்பாட்டு அறை மற்றும் 108 அவசர கால ஊர்தி ஆகிய செயல்கள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும்.

அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் மற்றும் ஆபத்துக்கால மருத்துவ உதவி ஆகியவற்றை சிறப்பு கட்டுப்பட்டு அறைகள் மூலம் ஒருங்கிணைக்கப்படும்.

 

எதுவெல்லாம் அனுமதி இல்லை :

வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனம் உபயோகம் அனுமதி கிடையாது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பொதுவினியோக கடைகள் இயங்காது . அவர்களுக்கு அறிவித்த நிவாரணங்கள் நேரடியாக பணியாளர்களால் வழங்கப்படும்.

கட்டுப்பட்ட பகுதியில் பகுதிகளில் பணியாளர்கள் பணிக்கு வர தேவையில்லை. அதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் முன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டும.

தேனீர்க் கடைகள் இயங்க அனுமதி கிடையாது .

21.6.2020 மற்றும் 28.6.2020 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமையும் மேற்கண்ட எந்தவித கட்டுப்பாடும் இன்றி முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எவ்விதமான செயல்பாடுகளும் அனுமதிக்கப்படாது. இந்தப் பகுதிகளில் ஒரு நாளைக்கு இரண்டுமுறை கிருமி நாசினி தெளிக்கப்படும்.

நிவாரணம்:

சென்னை பெருநகர பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி,  ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலை நகராட்சிகளிலும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

அதேபோன்று மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர், நல வாரிய உறுப்பினர்களுக்கு மற்றும் பல்வேறு துறையில் உள்ள பிற நல வாரிய உறுப்பினர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார.

Categories

Tech |