திருப்பூரில் உள்ள தனியார் சலவை ஆலையில் ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் போது வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் அருகே கருப்பகவுண்டன்பாளையத்தில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமாக பனியன் சலவை ஆலை இயங்கி வருகிறது. அந்த ஆலையில் ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் வேலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஏழு பேர் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது பாரூக் அகமது என்பவர் முதலில் விஷவாயு தாக்கி தொட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். தொட்டிக்குள் விழுந்தவரை காப்பாற்ற முயன்ற அபு, அன்வர், தில்கர் உசேன், ஆகியோரும் அடுத்தடுத்து விஷவாயு தாக்கி மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இந்த விஷவாயு தாக்குதலுக்கு ஆளான மூவரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.