நைஜீரியாவில் 180 நபர்களுடன் சென்ற படகு விபத்துக்குள்ளாகி, 4 பேர் பலியானதோடு 156 பேர் மாயமானதால் அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நைஜீரியா நாட்டில் ஒரு படகில் சுமார் 180 பேர், கெப்பி என்ற மாநிலத்தில் உள்ள மலேலே நகரில் இருக்கும் சந்தைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்கள் புறப்பட்டு சென்ற ஒரு மணி நேரத்தில் திடீரென்று படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நான்கு நபர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 20 நபர்கள் மீட்கப்பட்டுள்ளார்கள்.
மீதமுள்ள 156 நபர்களும் மாயமாகியுள்ளதால், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய உள்நாட்டு நீர்வழி அமைப்பின் பகுதி மேலாளரான யூசுப் பிர்மா, இதுகுறித்து கூறியுள்ளதாவது, ஒரு பழைய படகில் அதிகமானோர் பயணித்துள்ளனர். ஏற்கனவே குறைந்த பயணிகளை படகில் ஏற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதனை அவர்கள் கேட்கவில்லை. இது மட்டுமல்லாமல் பஜாஜ் மோட்டார் சைக்கிள்கள் 30 ஏற்றியிருக்கிறார்கள். மீட்பு பணி தொடரப்பட்டு வருகிறது. மாயமான 156 நபர்களில் நிறைய பேர் நீரின் அடியில் மூழ்கியிருக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.