திருவண்ணாமலை அருகே தடுப்பூசி போட்ட பின் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை அடுத்த விளை கிராமத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தமிழரசி. இவர்கள் இருவருக்கும் லத்தீஸ் என்ற ஆண் குழந்தை நான்கு மாதங்களுக்கு முன்பு பிறந்தது. நான்கு மாதங்கள் ஆன நிலையில் லத்தீஷிற்கு தடுப்பூசி போடுவதற்காக அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்றுள்ளனர்.
அங்கு தடுப்பூசி போட்டு வீட்டிற்கு வந்தபின் குழந்தைக்கு காய்ச்சலும், இருமலும் அதிகமாக இருந்து வந்துள்ளது. இதையடுத்து நேற்று காலை இருமல் முற்றிய நிலையில், லத்தீஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும், உறவினர்களும் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு தடுப்பூசி போட்டதன் காரணமாகவே குழந்தை இறந்ததாக கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின் தகவலறிந்த காவல்துறையினரும், சுகாதாரத் துறை இயக்குனரும் சம்பவ இடத்திற்கு விரைந்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தடுப்பூசி போட்டதால் தான் குழந்தை இறந்தது என்று கூறுவது தவறு. முறையான புகார் அளியுங்கள்,
அதன் பின் குழந்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவிக்க, வழக்கும் வேண்டாம், எதுவும் வேண்டாம் பச்சிளம் குழந்தையை அறுப்பதா ? எங்கள் குழந்தையை எங்களிடமே கொடுத்து விடுங்கள் என்று பெற்றோர் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.