சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் வைத்திருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் தென்காசி-ஆய்க்குடி சாலையில் வேகமாக சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருட்கள் கடத்தி சென்றவரையும் காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.
இவ்வாறாக புகையிலை பொருட்கள் வைத்திருந்த குற்றத்திற்காக லோகநாதன், சாகுல் ஹமீது, சலீம், பிரசன்னா ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த ஆட்டோ, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.