வெள்ளத்தில் சிக்கி தவித்த 4 பேரை தீயணைப்பு துறையினர் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சக்திவேல், பகவதி, அழகர்சாமி, சுந்தரமூர்த்தி என்ற நான்கு பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் இணைந்து எலக்ட்ரிக்கல் வேலை செய்வதற்காக கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்துக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் 4 பேரும் ஓடந்துறை பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். அந்த சமயம் ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் ஓடி கொண்டிருந்ததால் 4 பேரும் மேடான திட்டு அருகில் நின்று குளித்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் திடீரென பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து குளித்து கொண்டிருந்த 4 பேரும் கரைக்கு செல்ல இயலாததால் மணல் திட்டின் நடுவில் நின்று கொண்டு காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கயிறு கட்டி ஆற்றின் நடுவில் இருக்கும் மணல்திட்டு பகுதியில் சிக்கிய 4 பேரையும் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.