பாகிஸ்தானில் ஒரு கடையில் திருடியதாக பெண்கள் மீது குற்றம் சாட்டி அவர்களின் ஆடைகளை களைந்து தாக்கி இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பெண்கள் நான்கு பேரை சிலர் ஆடைகளில்லாமல், வீதியில் வைத்து அடித்துள்ளனர். அந்த பெண்கள், “சிறிய துண்டு துணி தாருங்கள்” என்று சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்களிடம் கெஞ்சி கேட்டுள்ளனர். எனினும் ஒருவர் கூட அவர்களுக்கு உதவவில்லை.
மேலும், அவர்கள் தடிகளை வைத்து அடித்துள்ளனர். பெண்கள் நான்கு பேரும் கதறி துடித்ததுடன், தங்களை விடுவிக்க சொல்லுமாறு மக்களிடம் கோரினர். எனினும் ஒருவர் கூட மனம் இரங்கவில்லை. மேலும், அந்த பெண்களை வீதிகளில் ஒரு மணி நேரம் ஆடைகளின்றி நிர்வாணமாக நடக்க வைத்துள்ளனர்.
அதனை சிலர் வீடியோ எடுத்து இணைதளங்களில் வெளியிட்டுள்ளனர். வீடியோவை பார்த்த பஞ்சாப் மாநிலத்தின் காவல்துறையினர் உடனடியாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய 5 குற்றவாளிகளை கைது செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பஞ்சாப் மாகாண காவல் துறையினரின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார்.
இதில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் கூறுகையில், பைசலாபாத் பாவா சாக் சந்தையில் குப்பை சேகரிக்கும் பணியை செய்து கொண்டிருந்தோம். அப்போது, எங்களுக்கு தாகமாக இருந்ததால், உஸ்மான் எலக்ட்ரிக் கடைக்கு சென்று தண்ணீர் பாட்டில் கேட்டபோது கடையின் உரிமையாளரான சதாம், நாங்கள் திருடுவதற்காக வந்ததாக பொய்யாக குற்றம் சாட்டினார்.
மேலும், மார்க்கெட் பகுதி முழுவதும் எங்களை தாக்கி ஆடைகளை அவிழ்த்து வீடியோ எடுத்தார்கள். அதனை தடுக்க மக்கள் யாரும் முன் வரவில்லை. மேலும் அவர்களை தடுப்பதற்கும் முயலவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.