தரைமட்ட தண்ணீர் தொட்டியில் மூழ்கி 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள குரோம்பேட்டை பகுதியில் வெங்கடேஷ் என்ற சலவைத் தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கயல்விழி மற்றும் சர்வேஷ் என்ற இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் வீட்டு வாசலில் நின்று விளையாடிக் கொண்டிருந்த சர்வேஷ் திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் சிறுவனைத் தேடி பார்த்துள்ளனர். இதனையடுத்து அவரது வீட்டின் முன்புறம் இருக்கும் தரைமட்ட தண்ணீர் தொட்டியின் மூடி சற்று விலகி இருந்துள்ளது.
இதனால் சந்தேகப்பட்டு கணவன் மனைவி இருவரும் தண்ணீர் தொட்டிக்குள் பார்த்தபோது சிறுவன் சர்வேஷ் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் சர்வேஷை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சர்வேஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த குரோம்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.