தமிழக கோவில்களில் சிலைகள் காணாமல் போனதாக பாலு என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின்படி சிலை கடத்தல் பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையின் போது தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து மிகவும் பழமையான மற்றும் தொன்மை வாய்ந்த 11 சிலைகள் திருடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதன்படி நின்ற விநாயகர் சிலை, நின்ற சந்திரசேகர், அம்மனுடன் சந்திரசேகர், நடன சம்பந்தர், போக சக்தி அம்மன், நவக்கிரக சூர்யன், பிடாரி தேவர், அஸ்திர அம்மன், தேவி, சந்திரசேகர அம்மன், சோமாஸ் கந்தர் உள்ளிட்ட 11 சிலைகள் திருடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி பண்ணாக பரமேஸ்வர கோவிலில் திருடப்பட்ட தேவி சிலை மற்றும் விநாயகர் சிலை அமெரிக்காவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த 2 சிலைகளும் கடந்த 1970-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த கடத்தலில் சிலை கடத்தல் மன்னன் சுபாஷுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மற்ற சிலைகளையும் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அமெரிக்கா அருங்காட்சியகத்தில் உள்ள தமிழகத்திற்கு சொந்தமான சிலைகளை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.