ஓசியில் சிகரெட் கேட்டதற்கு, இல்லை என்று கூறியதால் கடையை உடைத்து 40 ஆயிரம் பணத்தை சூறையாடிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள தென்கரை பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார். இவர் தனது வீட்டின் முன் பெட்டி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை டூவீலரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சிகரெட் வாங்கிவிட்டு பணம் தராமல் சென்றுள்ளனர். சிகரெடிற்கு பணம் கேட்ட செந்தில்குமாரை கடுமையாகத் தாக்கியதோடு, கடையை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் கடையில் வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்து சென்றுவிட்டனர். சம்பவம் குறித்து செந்தில்குமார் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பினார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 5 பேர் கொண்ட கும்பலை பிடிக்க முற்பட்டனர். அதில் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலின் தலைவன் முத்து வன்னி என்ற இளைஞரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். மற்ற நான்கு பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்தவரிடமிருந்து 40 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய தனுஷ், ராம்குமார், பாலாகார்த்திக், காஞ்சி வனம் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரு சிகரெட் ஓசியில் கேட்டு தகராறில் ஈடுபட்ட ரவுடியை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.